Wednesday, 6 November 2013

பாடல்களை கொலை செய்யும் இசைகுழுக்கள்.


பாடல்களை கொலை செய்யும் இசைகுழுக்கள்.சினிமா  

பல திருமணங்களில் வரவேற்ப்பு நிகழ்ச்சிக்காக விடியோ பதிவு செய்கிறோம். சமீபத்தில் ஒரு திருமணத்திற்க்கு வீடியோ பதிவு செய்தோம். அந்த திருமணத்தில் ஒரு குழு இசை நிகழ்ச்சி நடத்தியது. நானாக நானில்லை தாயே, திங்கள் உறங்கிய போதும், பச்சைக்கிளி முத்துச்சரம், பாவடை தாவணியில், சங்கீதம் மேகம், பூமழை தூவி, கும்கியில் ஒரு பாடல் என சுமார் 25 பாடல்கள் பாடினார்கள். ஒரு பாடலும் சுமாராக பாடப்படவில்லை. எந்த இசை கருவியும், அந்த இசை கருவியை ஒட்டியை இசையை வெளிப்படுத்தும் ஆனால் அவர்கள் வைத்திருந்த இசை கருவிகள் புதிது புதிதாக இசையை வெளிப்படுத்தின. 

இளமை என்னும் பூங்காற்று என்னும் எஸ்.பி.பியின் பாடல் பல நேரங்களில் நானும் என் நண்பர் புகைப்படக்காரர் ஜவஹரும் அடிக்கடி முனுமுனுப்போம். சில நிமிடங்களில் எங்கேயே அந்த பாடல் உண்மையாக ஒலித்துக்கொண்டு இருக்கும். அப்படி பல பாடல்கள் நம்மோடும், காற்றோடும் கலந்தவை. அந்தப்பாடல் திரையில் யாரும் பாடாமல் காட்சி அமைப்பாகவே படமாக்கப்பட்டு இருக்கும். அந்த பாடலில் எஸ்.பி.பியின் உணர்ச்சியும், காதலும், மெல்லிய காமமும் நம்மை கிறுகிறுக்கவைக்கும். தேனோடு கலந்த பால் என்பது போல் கூடவே ஒரு பெண்ணின் கோரஸ். அந்தப்பாடலை அந்த இசைக்குழுவை சார்ந்தவர் பாடும்போது அய்யோ என அலற தோன்றியது. 

25 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா, எஸ்.பி.பி குழு தமிழகத்தை மட்டுமல்ல இசை துறையையே ஓட்டுமொத்தமாக கட்டிப்போட்ட காலம். உதயகீதம் என்னும் படத்தில் சங்கீதமேகம் என்னும் பாடல் கேட்போரையும், பார்ப்போரையும் ஒரு மேடை பாடகனாகவே உணரச்செய்யும். நம்மை அறியாமல் நம் கையில் மைக் இருப்பது போன்று கற்பனையில் பாடவைக்கும். அந்த பாடலை இந்த பாடகர் கொத்து பரோட்டாவாக்கினார். 

சோகம், காதல், தெய்வீகம், தத்துவம், அன்பு, விரோதம், கோபம் அனைத்தையும் வெளிக்கொறுனுபவை இசை. பாடல்களின் வார்த்தைகளுடனே அத்தனை இசை கருவிகளும் சேர்ந்து வரும், பதில் சொல்லும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். திரைப்பட பாடல்கள் உள்வாங்குபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் இருக்கும் உணர்ச்சி கூட அந்த பாடலை மேடைகளில் பாடுபவர்களிடம் இல்லை. அதற்கு காரணம், எந்த முதிர்ச்சியும் அல்லது குறைந்த பட்ச பயிற்சியும் இல்லாமல் இசைக்குழுவை சார்ந்தவர்கள் மேடையேறுவதால் வரும் வினை. 

இந்த நிகழ்ச்சியில் ஒரு கருவியை வாசித்தவர் பெரும்பாலும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். மீதி நேரம் வாசிப்பது போல் ஃபிலிம் காட்டுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தார். நாசமாய் போனது இசை நிகழ்ச்சி. சிறிது நேரத்திற்க்கு பிறகு திருமண வரவேற்பு பிஸியாகிவிட்டதால் பாடல்கள் கேட்கவில்லை. 

ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் பாடல்களை கேட்கும் நிலை வந்தது. முதல் மரியாதை படத்தில் வெட்டிவேரூ வாசம் பாடல் மலேசியாவாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒவ்வொரு மில்லி நொடியிலும் உயிர் கசியும். உணர்ச்சி, சுகம், பாசம், சோகம் காதில் லட்சகணக்கான நரம்புகளையும் மீட்டும் ஒரு சோகம். அந்த பாடலின் பின்னணி இசை மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்கும். தனிமையான ஒரு அறையிலோ அல்லது ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு இந்த பாடலை கேளுங்கள். பாடலின் முடிவில் உங்கள் கண்களில் நிச்சயம் நீர் கசிந்தியிருக்கும். அந்த பாடலை மேடையில் பாடுவதை கேட்டபோது, வெறுப்பின் உச்சத்துக்கு சென்றேன். 

ஏதோ இந்த இசை குழுவில் மட்டும் தான் இப்படி பாடுகிறார்கள், இசையமைக்கிறார்கள் என நினைத்தால் தவறு. நான் இதுவரை பார்த்ததில் நூற்றுக்கு தொன்னூறு சதவிதம் இசைக்குழுக்களிலும் இதே நிலைதான். பயிற்சியும், தொழில் மேல் அக்கறையும் உள்ளவர்கள் மட்டுமே சிறப்பாக பாடுகிறார்கள், இசையமைக்கிறார்கள். பல இசைக்குழுக்களை ‘ஐபேட்’ என்ற சாதனம் வாழவைக்கிறது. 

சில திருமணங்களில் பார்வையற்றவர்களின் இசை நிகழ்ச்சிகளை படம்பிடித்து இருக்கிறேன். அவர்களிடம் இருந்து வெளிப்படும் பாடலின் தரம் சத்தியமாக கண் தெரிந்த பாடகர்களிடம்மில்லை. இந்த இசை குழுக்கள் கண், காது இருந்தும் குருடர்கள், செவிடர்களே. பல இசையமைப்பாளர்களும், இயக்குநர்களும், பாடலாசிரியர்களும், பின்னணி பாடகர்களும் தூக்கத்தை தொலைத்து, வேர்வையை சிந்தி நமக்கு அளித்த பொங்கிஷங்கள் அவை. காலத்தால் அழியாத பக்தி பாடல்களும், திரைப்பாடல்களுக்கும் பங்கம் வராமல் காப்பது இந்த இசைக்குழுக்களின் கடமை. ஆனால் அதை பலப்பல இசைக்குழுக்கள் செய்வதில்லை. 

எந்த தொழிலுக்கும் கலைக்கும் குறைந்த பட்ச பயிற்சி தேவை. என்னைப்பொருத்தவரை இந்த மாதிரி வெற்று சத்தங்கள், ஆரவாரங்கள் கூச்சல்களை எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வெற்று கூச்சல்காரர்களால் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மண்டபத்தில் அமருவதில்லை. உடம்பு சரியில்லாதவர்கள், குழந்தைகள், நேரத்துக்கு தூங்க வேண்டியவர்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். 

நல்ல இசை குழுக்கள் மூலம் இரண்டு மணி நேரத்தை திருமணத்துக்கு வருபவர்களுக்கு எல்லா கவலைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்க உதவுங்கள். இல்லையேல் விட்டுவிடுங்கள். பந்தாவுக்காகவும், வெத்து கவுரவத்துக்காகவும் இது போன்ற கூச்சல்காரர்களிடம் பணத்தை கொண்டும போய் அழிப்பதை விட ஸ்பீக்கர்களில் பாடலை ஓடவிடுங்கள் போதும். மண்டபங்களில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் பேசிக்கொள்ளவாவது நேரமும் கிடைக்கும்.

மென்மையான பாடல்கள் உங்கள் மனச்சுமையை இறக்கி வைக்கும். பாடல்களை கேட்பதற்காகவே அதிகம் இரவு நேரங்களில் பயணம் செய்கிறேன். பேருந்தில் பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க பேருந்தில் உள்ள ஸ்பீக்கர்கள் அனைத்துவிட்டு ஓட்டுநர் அவருக்காக சின்ன ஸ்பீக்கரில் பாடல் வைத்துக்கொள்வார். பயணம் முடியும் வரை எந்த சோர்வும் இல்லாமல் அவருடன் சேர்ந்து நானும் பாடல்களோடு பயணிக்கிறேன். சில நேரங்களில் சில மணித்துளிகள் அமைதியாக ஒரு உறக்கம் கிடைக்கிறது. இந்த இசைக்குழுக்களின் பாடல்களையும், செய்கைகளையும் பார்த்தப்பின் என்னால் பல நாட்கள் தூங்க முடிவதில்லை.

திருவண்ணாமலை அருணகிரிநாதர் விழா


என்னண்ணே பெரிய்ய கோயில்ல சீரியல் பல்பு எரியுது........

நானும் நண்பர்களும் இன்று மாலை தேரடிவீதியில் உள்ள ஒரு தேனீர் கடைக்கு தேனீர் அருந்த சென்றோம். அப்போது உடன் வந்த நண்பன் ஒருவன் என்னண்ணா, பெரியகோயில்ல சீரியல் லைட் எரியுது என்னண்ணா விசேசம் என கேட்டான். அதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அருணகிரிநாதர் விழாடா என பதில் சொன்னதும் அமைதியானான். என் மனமோ 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றது. 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்க்கு அடுத்தபடியாக மக்கள் பெருமளவில் கூடும் பெரும் விழாக்களில் ஒன்று அருணகிரிநாதர் விழா. 

மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழா. விழா நடைபெறும் மூன்று நாட்களும் சங்கபாடல்கள், திருப்புகழ், திருவாசகம், இதிகாசபாடல்கள், பக்திபாடல்கள் பாடுவார்கள். அத்தனை பாடல்களும் மனப்பாடம் செய்து பாடப்படுவதில்லை. உள்ளத்தில் இருந்து உணர்வு பூர்வமாக பாடுவார்கள். நாட்டியாஞ்சலி, கதாகலோட்சபம், மாடவீதியை வலம் வரும் பஜனை குழுக்கள், கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியடி என விழா களைக்கட்டும். அதிலும் குறிப்பிடவேண்டியது பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் ஒன்று. 

தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து கல்லூரி பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், தமிழ்பற்றாளர்கள், பேச்சாளர்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான தலைப்புகளில் குறிப்புகளே இல்லாமல் அற்புதமாக பேசுவார்கள். கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சங்கபாடல்கள், திருப்புகழ், 
திருவாசகம், இதிகாசங்களில் இருந்து மேற்க்கோள் காட்டி பேசுவார்கள். அவர்களிடம் குறிப்புகள் இருக்காது, அந்தளவுக்கு இலக்கியம், இதிகாச பாடல்கள், இலக்கணம் பற்றிய விசய ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள். 

படித்த இலக்கியவாதிகள் மேடைகளில் சங்க இலக்கியங்களில் இருந்து மேற்க்கோள் காட்டி பேசினால், படிக்காத, பாமர மக்கள் நிரம்பிய பஜனை குழுக்கள் படித்த இலக்கியவாதிகளுக்கு போட்டியாக சங்கஇலக்கிய பாடல்கள், திருவாசக பாடல்கள், புராண கதைகள் பற்றி பாடல்களாக தாங்களே இசையமைத்து பாடுவார்கள். 

இந்த மூன்று நாள்விழாவினை காண கிராமங்களில் இருந்து மக்கள் தங்கள் பிள்ளைகளோடு வருவார்கள். விடிய விடிய நடக்கும் விழாவினைகாணும் மக்கள் வீடுகளுக்கு திரும்ப வழியில்லாமல் உறவினர்கள் வீடுகளில் தங்குவார்கள். 

நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களால் செல்ல முடியவில்லை என்றால் தங்களது பிள்ளைகளை அனுப்பிவைப்பார்கள். அவர்கள் கேட்டுவிட்டு வந்து விவரிக்கும்போது அத்தனை ஆர்வத்தோடு கேட்பார்கள். அதிலும் பட்டிமன்றங்களின் போது பாதியில் சென்றவர்கள் தீர்ப்பு என்னவென அறிய துடிக்கும் ஆவலை விவரிக்க முடியாது. வெளியூர் மக்கள் விழாவுக்கு வர முடியாதவர்கள் உறவினர்களிடம் கேட்டு அறியும் போதும், அதனை விவரிக்கும் போது இருவரிடம்
அத்தனை பரவசம் இருக்கும்.

விழா நடைபெறும் நாட்களில் மக்கள் கூட்டம் மாடவீதியை நிரப்;பிவிடும். பஜனை குழுக்கள் மாடவீதியை வலம் வரும்போது
மக்கள் அவர்களின் தாகம் போக்க நீர், பால், பழரசங்களை தந்து உபசரிப்பார்கள். அந்தளவுக்கு மக்களிடம் ஈடுபாடுயிருந்தது. 
வெளியூரிலிருந்து வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய மடங்கள், சத்திரங்கள் போட்டிபோட்டன.

இந்த மாதிரியான விழாக்களில் மக்கள் கூடும் போது, சான்றோர்கள் கூறும் கருத்துக்கள் மக்களை வழி நடத்தின. இதற்கான முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து இருந்தார்கள். மக்களிடம் கருத்துக்களை கொண்டு சேர்க்க அன்று வாய்கள் இருந்தன, கேட்க காதுகள் இருந்தன, விவாதிக்க மக்களிடம் நேரமும், பொறுமையும் இருந்தன. பெரியவர்களை மதிக்கும் இளைஞர்கள் இருந்தார்கள். தற்போது பேசவும் ஆள்யில்லை, கேட்கவும் ஆள்யில்லை, வழிகாட்டும் பெரியவர்களின் சொல்லை கேட்க, மதிக்கும் பண்புமில்லை. 

இன்றைய நவயுக, அவசர யுகத்தில் மாநகரங்கள், நகரங்களில் தங்களது தெருக்களில் நடக்கும் விழாக்களில் கூட கலந்துக்கொள்ள நேரங்கள் இல்லை என்பதை போலவும், தொலைக்காட்சி ஒன்றே வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. கிராமங்களில் பெரியவர்கள் கற்று தரும் கலைகளை கற்க வேண்டிய இளைஞர்கள் செல்ஃபோன்களில் மூழ்கியுள்ளார்கள். ஆடிமாதங்களில் தெருக்களில் நடக்கும் ஆடிமாத விழாக்களில் சினிமா பாட்டு கச்சேரிகள், நடனங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட அருணகிரிநாதர் விழாவுக்குயில்லை என்பது வேதனைக்குரியது.

போலியான நாகரீக காட்டாற்று வெள்ளத்தில் பல்வேறு அரிய மரங்களும், சந்தனகாடுகளும் அடித்து செல்லப்பட்டுவிட்டன. கடந்த 20 ஆண்டுகளில் நாம் தொலைந்ததும் அதிகம், தொலைத்ததும் அதிகம். 
நன்னெறி, பக்தி மார்க்கம், வாழ்க்கை தத்துவங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியதும், ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு பின்வரும் தலைமுறையை வழிநடத்தவும், நினைவூட்டவும், அதனை அறிந்துக்கொள்ளவும் வேண்டும். அப்படி செய்யாத சமூகம் நிச்சயம் தடம்மாறிவிடும்.

சந்தேகத்தின் பேரில் அமெரிக்காவின் தனியார் கப்பல்


ஏதோவொரு சந்தேகத்தின் பேரில் அமெரிக்காவின் தனியார் கப்பலொன்று ஆயுதங்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு பிடித்து வரப்பட்டிருக்கிறது..செய்தியின் வீடியோபதிவு தொலைக்காட்சிகளில் பார்த்தேன்..


பிடித்து வரப்பட்ட ஊழியர்கள் எதோ மியாமி,ஹவாயி,பாலே தீவுகளுக்கு சுற்றுலா வந்தது போல் மிகவும் ஹாயாக இருக்கிறார்கள்..
ஒருவர் முகத்திலும் எந்த கவலையும் இல்லை..



இதே அமெரிக்கா ..இங்கிலாந்து நாடுகளாய் இருந்தால் freeze..hold on ...don't move என என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும் பயன்படுதப்பட்டு ..ஒவ்வொரு ஊழியரையும் பத்து போலிசார் விதம் .. சுற்றி நான்கு போர்கப்பலையும் மேலே பத்து போர்விமானங்களையும் முப்பது ஹெலிகாப்ட்டர் சூழ அக்கப்பலை மண்டியிட வைக்கும் காட்சியென அந்நாடுகளில் உள்ள எல்லா டிவி சேனல்களிலும் Breaking news என உலகத்தையே அல்லோல்கல படுத்தியிருப்பர்கள்..( யார் யாருக்கு என்னன்ன ஹாலிவுட் காட்சிகள் நினைவுக்கு வருகின்றனவோ திரையிட்டுக்கொள்க).

பல்வேறு சேனல்கள் அதை முழுமையாக காட்சிபடுத்தி ஆவணமாக வெளியிடும். அவர்கள் சினிமாக்களும் செய்திதொலைக்காட்சிகளும் தொலைக்காட்சி தொடர்களும் இந்த அடிப்படையிலேயே இயங்குகின்றன. காரணம் இந்நாடுகளை பார்த்து உலகம் பயப்படவேண்டும் அல்லது இப்படி செய்ய யாரும் துணியக்கூடாது என்ற எண்ணம்

நம் நாட்டில் அப்படி இல்லை. வழக்கு நடத்துவதில் பல சிக்கலான நடைமுறைகள் இருக்கக்கூடும். இதுபோன்ற முக்கியமான விசாரணைகள் ஒரு அமைப்பு மட்டுமே விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். நமது விசாரணை நடைமுறைகள் மறு பரீசலனைக்குரியவைகள்.. 

இந்த விவகாரத்தில் தற்போது எல்லா தூதரகங்களும் முழுவீச்சில் இயங்கிக்கொண்டிருக்கும் ..சில நாட்களில் விசாரணைக்கு பிறகு வழக்கம்போல் முழு மரியாதையோடு சாதாரணமாய் அவர்கள் அனுப்பப்டுவார்கள்...

incredible India என்பது இதுதானோ............

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



இன்று விஜய் டிவியில் படம் பார்த்தேன் .. படம் பார்பதற்க்கு முன்பே பல்வேறு கமெண்ட்ஸ் , விமர்சனங்கள் ,, தொலைக்காட்சிகளில் பட குழுவினர் ..பல்வேறு இயக்குனர்கள் புகழ்ந்து பாராட்டி தீர்த்து விட்டார்கள்

..இது ஒரு புறம் ..தமிழ் சினிமா ..உலகமே பார்க்காத புதிய பாதைக்கு திரும்பி இருப்பதாவும் ..அடுத்து மிஷ்கின் ஹாலிவுட் படங்கங்ளை விட அடுத்த ஸ்தானதிற்க்கு கொண்டு செல்வதாகவும்..ஐயோ காது கூசும் அல்லது செவிடாகும் அளவுக்கும் படம் வெளியான முதல் வாரம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது 

அல்லது விளம்பரம் செய்யப்பட்டது ..மிஷ்கின் சார் உங்க சித்திரம் பேசுதடி படம் அறிமுக இயக்குனராக எவ்வளவு முடியுமோ அதை செய்தீர்கள் பின்பு அஞ்சாதே படம் பார்த்து நான் பார்க்கும் நண்பர்கள் அனைவரிடமும் பல மாதங்கள் படம் கதையும் ,திரைக்கதையும் காட்சி அமைப்பையும் கோணங்களையும் பேசி பேசி இப்போது வரை எனக்கு சலித்ததில்லை..இன்று வரை நீங்கள் ஒரு இயக்குனராக மின்னிய ஒரேபடம் அதுதான்...

கதை களம் எப்படியிருந்தாலும் சொல்லப்படும் விதம்தான் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறது..இப்படம் திரைப்பட ரசிகர்கள் மனதில் ஒருகாலும் ஞாபக்கதிற்கு வராத படங்களில் ஒன்றாக நிச்சயமாய் இருக்கும்...ஒரு காட்சி அமைப்பு கூட மனதில் ஒட்டவில்லை..பீஸ் பீசாய் சீன்கள் ...படத்தின் படு தோல்வி கதை ..திரைக்கதை...ஓளிப்திவு..இசை..போட்டி போட்டுக்கொண்டு படத்தை காலி செய்துவிட்டன..

சராசரி சினிமா (அ) நல்ல சினிமா ..இந்த இரண்டில் சினிமா ரசிகனுக்கும் ..சினிமாவுக்கும் படு தோல்வியே

..25 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியர் திரையரங்கில் கார்த்திக் நடித்த என் ஜீவன் பாடுது என்று படம் ..அப்படி ஒரு கேவலமான படம் ..முடியும் வரை ஒன்றுமே விளங்காது ..பாடல்கள் சில நன்றாக இருக்கும் ..ஒரு காட்சியில் காதலிக்கு ...என்ன வாங்கலாம்.. என்ன வாங்கலாம்...என்று ஒரு வசனம் வரும் .பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகன் .................டேய் ...நான் டிக்கெட் வாங்கிய 10 ரூபாய மொதல்ல திருப்பி குடுடா வெறியில் கத்தினான் ..தியேட்டரே கைதட்டலால் அதிர்ந்தது படம் மிக சரியாக 2 நாட்களே ஓடியது.. 

திருவண்ணாமலையில் 1.2 நாட்கள் ஓடிய படங்கள் நிறைய உண்டு ஒரு சில ஆண்டுகளுக்கு முன் புகழ் திரையரங்கில் 2 காட்சிகள் மட்டும் ஓடிய படமும் உண்டு ...25 ஆண்டுகளுக்கு பிறகு அதே மனநிலை .. 

இயக்கம் : மிஷ்கின் .இசை :இளையராஜா இந்த இரண்டு பேரும் போஸ்டரில் இருந்திராவிட்டால் மேற் சொன்ன நிலை கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும் இதில்வேறு நீங்கள் தான் முதன் முதலாக இளையராஜாவின் மகத்துவம் அறிந்தவர் போல் முன்னணி இசை என்று அறிமுகம்....உலகின் எந்த மொழி படமானாலும் பின்னணி இசை தான்...

இப்படித்தான் ..cinematography ..ஒருவர் art of light ..ஒலி ஓவியர்..சந்தேகமே வேண்டாம் சாட்சாத் தங்கர்பச்சான் தான்..அழகி படத்திற்கு பிறகு நானே சினிமா ..தமிழ் சினிமாவுக்கு யார் வந்தாலும் நானே ..என்படம்தான் நுழைவு வாயில் என்றார் ..இப்போது சினிமாவில் மட்டுமல்ல சென்னையில் இருக்கிறாரா தெரியவில்லை..

படம் தோல்வி அடைந்தபின் பணத்தை தயாரிப்பளர்கள் ..நடிகர்கள் பணத்தை சம்மந்த பட்டவருக்கு சிறிது திருப்பி கொடுத்ததாக வரலாறு உண்டு...நீங்களும் இதை பரீசிiலிக்கலாம்..பணத்தை உங்களை நம்பி வந்த ரசிகனுக்கு கொடுத்து...

நீங்கள் சில ஆண்டுகளுக்கு எங்கேயும் தொலைகாட்சிகளில் தினசரி ..வார இதழ்களில் பேசாமல் இருப்பது மிகவும் உங்களுக்கும் 

முக்கியமாக எங்களுக்கும் நல்லது....

ஏ.டி.எம்களில் பணம் காலியாகி பொதுமக்கள் படும் பாடு ....


மாதத்தின் முதல் நாட்களில் ஏ.டி.எம் மிஷின்கள் வழக்கமாகவே பிஸியாகவே இருக்கும். அதுவும் தீபாவளி, பொங்கல், வருடபிறப்பு போன்ற நாட்களில் சொல்லவே வேண்டாம். மக்கள் கூட்டம் அலைமோதும். விரைவில் பணமும் தீர்ந்துவிடும். பெரும்பாலான தனியார் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளம் ஏ.டி.எம் நடைமுறையாகவே எடுக்கபடுகிறது

மாதத்தின் முதல் நாட்களும் அதைத்தொடர்ந்து பண்டிகை நாட்கள் என தொடர் விடுமுறையாகிவிட்டால் தீபாவளி பொங்கல் விடுமுறைக்கு விடும் விஷேஷ ரயில் முன்பதிவு போல சில நிமிடங்களில் அல்லது சில மணிகளில் ஏ.டி.எம்களில் பணம் காலியாகி பொதுமக்கள் பாடு படு திண்டாட்டமாகிவிடுகிறது. 

தொடர் விடுமுறை நாட்கள் அல்லது விழாக்காலங்களில் வங்கிகள் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது. 
இதை குறிப்பிடகாரணம் 2ந்தேதி சனிக்கிழமை தீபாவளி. 1ந்தேதி ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுக்க மக்கள் கூட்டம் மணிக்கணக்கில் நின்றிருந்தது. அன்றே பணம் காலியாகிவிட்டது. 

விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை வங்கிகள் திறக்கவில்லை, நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வங்கி திறந்து ஏ.டி.எம்களில் பணம் வைப்பதற்கான வழியில்லை. 

24 மணி நேரமும் மக்கள் சேவை செய்யும் இராணுவம்,.... காவல்துறை,..... தீயணைப்புத்துறை,... போக்குவரத்து . ........குடிநீர் வழங்கல் துறை....., தொலைதொடர்பு,...... அரசு மருத்துவமனைகள்...... போன்ற பல துறையினர் 24 மணி நேரமும் நமக்காக உழைக்கின்றனர். 

பல அரசு மற்றும் தனியார் துறைகள் ஷிப்ட் முறையில் இயங்குகின்றன. ஒட்டுமொத்த விடுப்பு என்பது கிடையாது. ஆனால் வங்கி துறையினர் மட்டும் அரசு விடுமுறை நாட்களில் மக்களின் சிரமத்தை உணராமல் உள்ளனர். 
அத்தியாவசிய பணிகள் அனைத்துக்கும் இன்று பணம் தேவை. யாருக்கு பணம் தேவை என்றாலும் பணம் வைத்திருப்பவர் வங்கிக்கு சென்று தான் பணம் எடுத்து வரவேண்டிய நிலை. வங்கிகள் செயல்படாததால் அவசரத்துக்கு அவர்களும் தரமுடியாது.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி, விடுமுறை நாட்களில் ஏ.டி.எம் சென்டர்களில் வழியாக பொதுமக்களுக்கு தடையின்றி பணம் வைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இதை அத்தியாவசிய சட்டத்தின் கீழ் மத்தியரசு கொண்டு வர வேண்டும். 

அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் தங்களுக்கு இதுதேவை, அது தேவை என என்றும் மார்கண்டேயன் போல் 20 அம்ச கோரிக்கைக்காக ஆண்டு தோறும் போராட்டம் நடத்துகிறீர்கள். மக்களின் இந்த கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்வதில் என்ன சிரமம். பணி நேரத்துக்கு மேல் பணி செய்தால் தனியாக கூடுதல் சம்பளம் வாங்கத்தான் போகிறிர்கள். அதை வாங்கிக்கொள்ளுங்கள் மக்களின் கஷ்டத்தை உணருங்கள். 

எங்களுக்கும் குடும்பம் உள்ளது நாங்களும் குடும்பத்தோடு விசேஷத்தை கொண்டாட வேண்டும் என சொல்லுவீர்களேயானால் கொஞ்சம் சிந்தியுங்கள் எல்லா துறையினருக்கும் குடும்பம் உள்ளது.

மேற்சொன்ன 24 மணி நேரம் செயல்படும் அரசு அமைப்புகளுக்கு ஏதாவது ஒரு பண்டிகை நாட்களில் ஒட்டுமொத்த விடுமுறை எடுத்துக்கொண்டால் நம் பாதுகாப்பு மற்றும் நிலையை எண்ணிப்பாருங்கள். மக்களுக்காக தான் ஒரு மாற்று ஏற்பாட்டை கேட்கிறோம். 

பொது நல வழங்குகள் தொடுக்கும் அமைப்புகள், தனிநபர்கள் இது சம்மந்தமாக நீதிமன்ற கதவை தட்டினால் பொதுமக்களுக்கு பெரும்பயனை ஏற்படுத்தும்.

Sunday, 26 May 2013

நல்ல பிள்ளைகள் எத்தனை தந்தைக்கு வாய்க்கிறார்கள்.




23.05.2013 அன்று திருக்கோவிலூரை சேர்ந்த மருத்துவர் மகளின் திருமணதிற்கு வீடியோபதிவு செய்ய விழுப்புரம் சென்றிருந்தோம் நாதஸ்வரம் வாசித்த பெரியவர் ஒய்வு நேரத்தில் சக கலைஞர்களை என்னிடம் அறிமுகம் செய்தார். இருமகன்களும் தவில் வாசிக்கிறார்களாம். இளையமகன் எம்.சி.ஏ படித்துவிட்டு சென்னையில் நல்ல உத்தியோகத்தில் உள்ளதாக சொன்னார். தன் மகன் எம்.சி.ஏ படித்திருப்பதாய் சொல்லும்போது அவரிடம் ஒரு சந்தோஷம் தெரிந்தது. 

ன்று வேலைக்கு லீவு போட்டுவிட்டு தவில் வாசிக்க வந்ததாக சொன்னார். எம்.சி.ஏ படித்திருப்பது அவர் குடும்பத்திற்க்கு அல்லது அவருடன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இன்று இந்த திருமணத்தில் இரண்டாயிரம் பேர் அவர் தவில் திறமையை கண்டு மெய் மறந்ததாக சொன்னேன். சரஸ்வதி சிலரிடம் மட்டுமே வாழ்கிறாள். கலை எப்பொழுதும் காசு, பணம், சாதிகளை கடந்தது. உங்கள் மகன் எம்.சி.ஏ என்பதை விட நல்ல தவில் கலைஞன் என்பதில் மேலோங்கி நிற்கிறார் என்றேன். தந்தையின் கண்களில் அப்படி ஒரு சந்தோஷம். என் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டார்.

மிக சாதாரணமான டிகிரி அல்லது சாதாரண படிப்பை படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல், வேறு எந்த திறமையும் இல்லாமல் ஊர் சுற்றும் பலருக்கு இவர் ஒரு முன்னுதாரணம். ( என் பையன் அந்த பள்ளியில் படிக்கிறான், அந்த காலேஜ்ஜில் படிக்கிறான், அவரைப்போல வருவான், இவரைப்போல வருவான் என வெத்து பந்தா காட்டும் பெற்றோர்களும் அடக்கம் ).

இப்படி பல நல்ல பிள்ளைகள் எத்தனை தந்தைக்கு வாய்க்கிறார்கள்.

டி.எம்.எஸ் ஒரு சகாப்தம்.





கடந்த 40 ஆண்டுகால திரையுலக பாடகர்களில் பெரியவர் டி.எம்.எஸ். வானொலி கோலோச்சிய காலத்தில் சுமார் 30 ஆண்டுகாலம் எந்த வானொலி அலைவரிசையில் வைத்து பாடல்கள் கேட்டாலும் பாடல் கண்ணதாசன், இசை எம்.எஸ்.வீ, பாடியவர் டி.எம்.எஸ் என இந்த மும்மூர்த்திகளின் பெயரை பலமுறை வானொலிகளில் கேட்கலாம்.



டி.எம்.எஸ் 52 இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தவர் என்பதே பெரும் சாதனை.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பல மொழிகளில் பாடியவர். எந்த நடிகருக்கு பாடுகிறாறோ அந்த நடிகரே அவரது குரலில், நேரடியாக பாடுவது போன்ற பிரமிப்பு இருக்கும். பக்தி பாடல்கள் குறிப்பாக முருகர் பாடல்கள், கண்ணதாசனின் கிருஷ்ணகான பாடல்கள் கேட்டிராத செவிகள் இருக்க முடியாது. பாடல்களில் உள்ள சூட்சுமங்கள் அவர் பாடிய முருகர் பாடல்களில் மூன்று வரியில் விடை கிடைத்தது. 

அசைச்சொல்லின் தொடராலே அமைந்தது ராகம்.
பாடல் அளவை முறைப்படுத்த அமைந்ததே தாளம். 
இசையின் பொருள் விளங்க பாடுதல் பாவம்

இசையால் வசமாக இதயம்மேது
இறைவனே இசை வடிவன்னும்போது..
தமிழில் இசையால் வசமாக இதயமேது.....

என அவர் பாடியது கேட்க கேட்க இசையின் உன்னதம் விளங்கும். 
நீண்ட இடைவெளிக்கு பின் சினிமாவின் இரண்டாம் தலைமுறை தொடக்கத்தில், இரயில் பயணங்கள் படத்தில், 
நூலும்மில்லை, வாலும்மில்லை என்ற பாடலும், 
அமைதிக்கு பெயர் தான் சாந்தி
என்ற பாடல்களை அப்போது முனுமுனுக்காத இளைஞர்கள் இல்லை எனலாம். ஒரு தலைராகம் படத்தில், என் கதை முடியும்நேரமிது என்ற பாடல்க்கு பின் குரல்வளம் ஒத்துபோகாத நடிகர்கள், காலமாற்றம் போன்றவற்றால் சினிமாவில் நீண்ட இளைவெளி டி.எம்.எஸ்க்கு ஏற்பட்டது. 

மொழி தெரியாத பாடகர்கள் தமிழுக்கு வந்து பாடும்போது வரியின் உச்சரிப்பு மாறுவதால் அதன் பொருள் மாற்றம் ஏற்படுவதை கேட்டு பலமுறை தன் மனவேதனையை வெளிப்படுத்தினார் டி.எம்.எஸ். ஒரு பாடலை பாடி பிரபலமாகி உலகமெங்கும் கலைநிகழ்ச்சி சென்று வந்தால் சாதனை பேசும் இன்றைய பாடகர்களுக்கு மத்தியில் டி.எம்.எஸ் பொக்கிஷம். 

யார் தச்ச சட்ட எங்க தாத்தா தச்ச சட்ட என்ற வரியை தொடர்ந்து இருபது முறை வேகமாக சொன்னால் நாக்கு குழறும், உச்சரிப்பு வராது. ஆனால், டி.எம்.எஸ் அருணகிரிநாதர் படத்துக்காக பாடிய முத்தை திரு என்ற பாடலை ஒரு தடைவ கேட்டுப்பாடுங்கள் அந்த பாடலை பின் தொடர்ந்து பாட முடியாது, புரிந்துக்கொண்டு பின் தொடர்ந்து பாடவும் முடியாது. 
எங்த ரெக்கார்டிங் தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் பாடப்பட்ட பாடல் அது. அன்றைய காலகட்டத்தில் இசை கலைஞர்களும், பாடகர்களும், பாடலாசிரியர்களும் ஓரே அறையில் இருந்து பாடினர். ஓவ்வொருவரிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருந்தன. இன்றைய இசை கலைஞன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் இசைத்துறை உள்ளது. 

சமூக மாற்றங்களின் கட்டாயத்தில் இப்பொழுது கலைநிகழ்ச்சிகளில் இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைத்தது, பாடகர்கள் தாங்கள் பாடிய பாடல்களை மட்டுமே பாடி ஸ்டார்நைட் நடப்பதாகிவிட்டது. டி.எம்.எஸ் போன்ற மாபெரும் கலைஞர்களின் கஷ்டத்தையும், உழைப்பையும் சொல்வதற்க்கு யாருமில்லை, அந்த துறையிலும் யாருமமில்லை என்பது இன்னும் வேதனையானது. இன்றைய பாடல்களில் சத்தத்துக்கு இடமமிருக்கிறது, உணர்வுகளுக்கும், உணர்ச்சிக்கும் இடம்மில்லை. 

கண்ணதாசன் தீர்க்கதரிசி. டி.எம்.எஸ்க்கு எந்த நிலையிலும் மரணம்மில்லை என்பதை பாடலாக எழுதி, டி.எம்.எஸ் வாயாலயே பாடவைத்தார். 

நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. உண்மைதான், காலங்கள் கடந்தாலும் அவர் இசையின் வழியாக நம்மிடம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார், வாழ்வார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

பலர் ஒரு துறையில் பிறக்கிறார்கள். சிலர் மட்டுமே வாழ்கிறார்கள் அதில் நம் டி.எம்.எஸ் வாழ்ந்தவர். வாழ்கிறவர், வாழ்ந்துக்கொண்டே இருப்பார்.