மாதத்தின் முதல் நாட்களில் ஏ.டி.எம் மிஷின்கள் வழக்கமாகவே பிஸியாகவே இருக்கும். அதுவும் தீபாவளி, பொங்கல், வருடபிறப்பு போன்ற நாட்களில் சொல்லவே வேண்டாம். மக்கள் கூட்டம் அலைமோதும். விரைவில் பணமும் தீர்ந்துவிடும். பெரும்பாலான தனியார் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளம் ஏ.டி.எம் நடைமுறையாகவே எடுக்கபடுகிறது
மாதத்தின் முதல் நாட்களும் அதைத்தொடர்ந்து பண்டிகை நாட்கள் என தொடர் விடுமுறையாகிவிட்டால் தீபாவளி பொங்கல் விடுமுறைக்கு விடும் விஷேஷ ரயில் முன்பதிவு போல சில நிமிடங்களில் அல்லது சில மணிகளில் ஏ.டி.எம்களில் பணம் காலியாகி பொதுமக்கள் பாடு படு திண்டாட்டமாகிவிடுகிறது.
தொடர் விடுமுறை நாட்கள் அல்லது விழாக்காலங்களில் வங்கிகள் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது.
இதை குறிப்பிடகாரணம் 2ந்தேதி சனிக்கிழமை தீபாவளி. 1ந்தேதி ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுக்க மக்கள் கூட்டம் மணிக்கணக்கில் நின்றிருந்தது. அன்றே பணம் காலியாகிவிட்டது.
விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை வங்கிகள் திறக்கவில்லை, நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வங்கி திறந்து ஏ.டி.எம்களில் பணம் வைப்பதற்கான வழியில்லை.
24 மணி நேரமும் மக்கள் சேவை செய்யும் இராணுவம்,.... காவல்துறை,..... தீயணைப்புத்துறை,... போக்குவரத்து . ........குடிநீர் வழங்கல் துறை....., தொலைதொடர்பு,...... அரசு மருத்துவமனைகள்...... போன்ற பல துறையினர் 24 மணி நேரமும் நமக்காக உழைக்கின்றனர்.
பல அரசு மற்றும் தனியார் துறைகள் ஷிப்ட் முறையில் இயங்குகின்றன. ஒட்டுமொத்த விடுப்பு என்பது கிடையாது. ஆனால் வங்கி துறையினர் மட்டும் அரசு விடுமுறை நாட்களில் மக்களின் சிரமத்தை உணராமல் உள்ளனர்.
அத்தியாவசிய பணிகள் அனைத்துக்கும் இன்று பணம் தேவை. யாருக்கு பணம் தேவை என்றாலும் பணம் வைத்திருப்பவர் வங்கிக்கு சென்று தான் பணம் எடுத்து வரவேண்டிய நிலை. வங்கிகள் செயல்படாததால் அவசரத்துக்கு அவர்களும் தரமுடியாது.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் தங்களுக்கு இதுதேவை, அது தேவை என என்றும் மார்கண்டேயன் போல் 20 அம்ச கோரிக்கைக்காக ஆண்டு தோறும் போராட்டம் நடத்துகிறீர்கள். மக்களின் இந்த கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்வதில் என்ன சிரமம். பணி நேரத்துக்கு மேல் பணி செய்தால் தனியாக கூடுதல் சம்பளம் வாங்கத்தான் போகிறிர்கள். அதை வாங்கிக்கொள்ளுங்கள் மக்களின் கஷ்டத்தை உணருங்கள்.
எங்களுக்கும் குடும்பம் உள்ளது நாங்களும் குடும்பத்தோடு விசேஷத்தை கொண்டாட வேண்டும் என சொல்லுவீர்களேயானால் கொஞ்சம் சிந்தியுங்கள் எல்லா துறையினருக்கும் குடும்பம் உள்ளது.
மேற்சொன்ன 24 மணி நேரம் செயல்படும் அரசு அமைப்புகளுக்கு ஏதாவது ஒரு பண்டிகை நாட்களில் ஒட்டுமொத்த விடுமுறை எடுத்துக்கொண்டால் நம் பாதுகாப்பு மற்றும் நிலையை எண்ணிப்பாருங்கள். மக்களுக்காக தான் ஒரு மாற்று ஏற்பாட்டை கேட்கிறோம்.
பொது நல வழங்குகள் தொடுக்கும் அமைப்புகள், தனிநபர்கள் இது சம்மந்தமாக நீதிமன்ற கதவை தட்டினால் பொதுமக்களுக்கு பெரும்பயனை ஏற்படுத்தும்.


No comments:
Post a Comment